போர்ச்சுகலின் வடமேற்கு பகுதியான போர்டோ நகரின் கம்பன்ஹா பகுதியில் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த துயரமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

59 வயதான நபர் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். காரணம், 100 கிலோக்கும் மேல் எடையுள்ள அவரது மனைவி தவறி இடறி விழுந்ததில், அவர் படுத்திருந்த இடத்திலேயே சிக்கி மூச்சுத்திணறி இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவலின்படி, 60 வயதான மனைவி படுக்கையிலிருந்து எழும்பும்போது இடறி விழுந்து, தரையில் படுத்திருந்த கணவன் மீது விழுந்துள்ளார். படுக்கை மற்றும் சுவருக்கு இடையில் சிக்கியதால் அவர் தனியாக எழ முடியாமல் உதவி குரல்  எழுப்பினார்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை தூக்கி எழுப்பினாலும், கணவன் அந்த நேரத்திலேயே மயங்கி கிடந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவி குழுவினரும் வந்து சிகிச்சை அளித்தும் பயனில்லை; அவர் இதயத் துடிப்பு நின்றதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், இது ஒரு அரிதான விபத்து எனவும், எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இறப்புகாரணம் “தற்செயலான மூச்சுத்திணறல்” என்று உறுதி செய்யப்பட்டது.

அதிக எடையால் எழ முடியாத மனைவியை அங்கிருந்த ஐந்து பேரின் உதவியால் மட்டுமே தூக்கிச் சாத்தியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கணவனை இழந்த அதிர்ச்சியில் உள்ள மனைவிக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.