சேலம் பொன்னம்மாபேட்டை மிலிட்டரி ரோடு, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரன் – ராணி தம்பதியின் இளைய மகனான சரவணன் (31), கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி வனிதா என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்.

வடக்கு ரெயில்வே லைன் அருகே வாடகை வீடு எடுத்து தனியாக தங்கி வந்த வனிதாவை, நேற்று (ஆக. 29) காலை அவரது அக்காள் மரகதம் பார்க்க சென்றபோது, கதவு குச்சியால் அடைக்கப்பட்டிருந்ததோடு, செருப்பு வெளியே இருந்ததை கண்டு சந்தேகம் கொண்டார். கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, வனிதா தலையில் ரத்தக் காயங்களுடன், வாயில் துப்பட்டா அமுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து குடும்பத்தினரும், 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் அங்கு திரண்டு கதறி அழுதனர்.

உடனடியாக அங்கு போலீசார், தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து இரும்பு ராடு கைப்பற்றப்பட்டது. இதன் மூலம், வனிதா இரும்பு ராடால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், வனிதாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், வனிதாவுக்கு நாமக்கல் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த நவீன் (23) என்ற இளைஞருடன் நெருங்கிய பழக்கம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அடிக்கடி இருவரும் ஒன்றாக வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளனர். வனிதா சம்பாதித்த பணத்தை நவீனிடம் கொடுத்ததாகவும், இது தொடர்பாக  அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இரவு இருவரும் மதுவில் மிதந்த நிலையில் தகராறில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோபம் அடைந்த நவீன், இரும்பு ராடால் வனிதாவின் தலையில் அடித்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. தற்போது போலீசார் நவீனை வலைவீசி தேடி வருகின்றனர். அவரை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெளிவாகும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.