வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது சாதாரணம். ஆனால் ஒரு ரயிலே நெரிசலால் நகர முடியாமல் சிக்கிக்கொண்டதைக் கண்டிருக்கிறீர்களா? இந்த அதிர்ச்சி தரும் காட்சி உத்தரபிரதேசம் வாரணாசியில் நிகழ்ந்துள்ளது.

தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ட்விட்டரில் @thenewsbasket என்ற கணக்கில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு ரயில் நகர முடியாமல் சாலையோரம் நின்று, முன்னால் நிறுத்தப்பட்ட வாகனங்கள் காரணமாக கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.

பொதுவாக ரயில்வே கேட் மூடப்படும் முன்பே வாகனங்கள் நின்றுவிடும். ஆனால் இந்த இடத்தில் மக்கள் விதிமீறி தங்களது வாகனங்களை ஒழுங்கின்றி நிறுத்தியதாலும், போக்குவரத்து போலீசார் கவனிக்காததாலும், ரயில் முழுமையாக நின்றுவிட்டது.

இந்த நெரிசலால் சாலையில் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, ரயிலில் பயணித்தவர்களும் தவித்தனர். வெறும் 7 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதில் ரயிலின் முன்புறம் வாகனங்கள் சாலையை மறைத்திருப்பது மற்றும் போலீசார் அதை அகற்ற முயற்சிப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

“>

இந்த வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். “இந்தியாவில் இது கூட சாத்தியம் தான்!”, “ரயிலே போக்குவரத்து நெரிசலில் சிக்குது… அப்போ நமக்கென்ன நிம்மதி?”, “மெக்கானிக் வர்ற வரை ரயில் அங்கேயே தங்கும் போல!” என நக்கலும், சிந்தனையையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ, இந்தியாவின் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் எவ்வளவு மோசமான கட்டத்தில் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது.