போர்ச்சுக்கல் நாட்டில் கம்பன்ஹா பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவிக்கு 60 வயது ஆகிறது. தற்போது இந்த பெண் 100 கிலோ எடையுடன் இருப்பதால் தினமும் கணவர் கட்டிலுக்கு கீழே தரையில் தூங்குவது வழக்கம்.
கடந்த 14ஆம் தேதி படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி எழுந்திருக்க முயன்றார். அப்போது தடுமாறி தரையில் படுத்திருந்த கணவர் மீது விழுந்து விட்டார். கணவரால் தனது மனைவியை அப்புறப்படுத்த இயலவில்லை. அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை போராடி மீட்டனர். பின்னர் மயக்கமடைந்த கணவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, அந்த நபரின் இறப்பிற்கு மூச்சுத்திணறல் தான் காரணம். இது இயற்கைக்கு மாறான மரணம் என்றாலும் குற்றம் எதுவும் நடக்கவில்லை என்பதால் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளனர். தனது உடல் பருமன் காரணமாக கணவர் இறந்துவிட்டதால் அந்த பெண் சோகத்தில் உள்ளார். அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
