மலேசியாவின் தெரெங்கானு மாகாணத்தில், இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை புறக்கணித்தால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 ஆயிரம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.62 ஆயிரம்) அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்ற புதிய ஷரியா சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த உத்தரவை அங்கு ஆட்சி செய்கிற Pan-Malaysian Islamic Party (PAS) அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகை முஸ்லிம்களுக்கு முக்கியமானது என்றும், இந்த தொழுகையை தவிர்க்கும் நபர்கள் சரியான காரணம் தரவேண்டும் என்றும், இல்லையெனில் குற்றவாளியாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரெங்கானு சட்டமன்ற உறுப்பினர் முகமது காலித் அப்துல் ஹாதி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தக் கட்டுப்பாடுகள் தற்போது ஆளுமை பெற்றும், விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றன. மனித உரிமை போராளிகள், குறிப்பாக ஆசிய மனித உரிமைகள் இயக்கத்தின் இயக்குநர் பில் ராபர்ட்சன், இது மத சுதந்திரத்துக்கும் மனித உரிமைக்கும் எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொழுகையை தவிர்க்கும் உரிமையும் நம்பிக்கையைப் போல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும், இந்த சட்டம் இஸ்லாமின் பெயரைப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த புதிய தண்டனை சட்டத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தல் எழுந்துள்ள நிலையில், தெரெங்கானு மாநிலத்தில் இஸ்லாமிய விவகாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
