விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நிறுவமான நாசா, கனடாவின் விண்வெளி நிறுவத்துடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு விண்வெளிக் காட்சிகளை மிகத் தெளிவாகப் பதிவு செய்து வரும் இந்த தொலைநோக்கி, பால்வெளி மண்டலத்தில் உள்ள 7-வது கிரகமான யுரேனஸைப் பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே யுரேனஸுக்கு 28 நிலாக்கள் இருப்பதாக அறிவியல் உலகம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் நடத்திய அண்மைய ஆய்வில், யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி மேலும் ஒரு புதிய நிலா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய நிலா தற்போது எந்தவிதப் பெயரும் பெறாத நிலையில், நாசா விரைவில் அதிகாரப்பூர்வமாக பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றமாகவும், மேலும் பல மர்மங்களை வெளிக்கொணரும் முயற்சிக்கு வித்திடக்கூடியதாகவும் உள்ளது.
