அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள மேரிவேல் உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறை மோதல், ஒரு மாணவர் உயிரிழந்து, மற்றொரு மாணவர் காயமடைந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில், 59வது அவென்யூ மற்றும் ஆஸ்போர்ன் சாலை அருகே உள்ள பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பீனிக்ஸ் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், காயமடைந்த இரு மாணவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மற்றவர் உயிர் பிழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பள்ளி முழுவதும் முடக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆபத்து இல்லை என உறுதி செய்யப்பட்டது .

இந்த சோக சம்பவத்தை “பயங்கரமான பேரழிவு” என அரிசோனா பொது கல்வி கண்காணிப்பாளர் டாம் ஹார்ன் வர்ணித்தார். “பள்ளிகள் பாதுகாப்பான இடங்களாக இருக்க வேண்டும். பள்ளி வளாக பாதுகாப்பு அதிகாரி உடனடியாக செயல்பட்டு, மாணவருக்கு முதலுதவி அளித்து தனது கடமையைச் செய்தார்.

இந்த சம்பவம், பள்ளிகளை பாதுகாப்பாக வைத்திருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற எனது உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது,” என்றார் அவர். பீனிக்ஸ் யூனியன் உயர்நிலைப் பள்ளி மாவட்டத்தில் 2,800 மாணவர்களுக்கு மேல் பயிலும் இந்தப் பள்ளியில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட வாரிய உறுப்பினர் ஜெரமையா கோட்டா, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பீனிக்ஸ் மாநகர சபை உறுப்பினர் பெட்டி கார்டடோ, “வகுப்பறைகள் அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். எங்கள் சமூகம் ஒற்றுமையுடன் நிற்கிறது,” எனக் கூறினார்.

உயிரிழந்த மாணவரின் அடையாளம் மற்றும் மோதலுக்கான காரணம் குறித்து இன்னும் விவரங்கள் வெளியாகவில்லை. பள்ளி வளாக அதிகாரி உடனடியாக முதலுதவி அளித்ததாகவும், பின்னர் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.