ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந்த வெங்கடேசனின் மகள் தேவகீர்த்திகா (7), அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, “விளையாடப் போகிறேன்” என்று சொல்லி வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலையில் பல்வேறு இடங்களில் தேடியும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரும் தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தேவிபட்டினம் பெருமாள் கோவில் குளத்தில் சிறுமியின் உடல் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதறி அழுதனர். தேவிபட்டினம் போலீசார் உடனடியாக அங்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், கோவில் குளம் அருகே விளையாடிய சிறுமி தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், இந்த மரணத்துக்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தேவிபட்டினம் பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
