மேற்கு வங்காளத்தின் பர்த்வான் நகரம் அருகே இன்று அதிகாலை நடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில், பீகாரை சேர்ந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து மோதியதில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர், மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து கிழக்கு பர்த்வான் மாவட்டத்தின் ஃபகுய்பூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அப்போது பேருந்தில் மொத்தம் 45 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மேற்கு வங்காளத்தின் பல்வேறு கோவில்களுக்கு தரிசனம் செய்து, பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் எட்டு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகள் உட்பட பலர் பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.