குஜராத் மாநிலம் நவுசாரியை சேர்ந்தவர் ஜோதி. இவரது சகோதரி நிஷா திருமணமாகி மும்பையில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று நிஷாவின் 66 வயது மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு நபர் வாடகைக்கு வீடு பார்க்க வந்தார். அந்த சமயம் நிஷா வீட்டில் இல்லை. இருவரும் பேசி கொண்டிருந்த போது வீட்டிலிருந்த கழிவறையை பயன்படுத்தி கொள்ளலாமா என மூதாட்டியிடம் அனுமதி கேட்டு உள்ளே சென்றார்.

பின்னர் வெளியே வந்து தண்ணீர் கசிவு இருப்பதாக மூதாட்டியிடம் கூறியதால் மூதாட்டி அங்கு சென்று பார்த்தார். உடனே அந்த நபர் மூதாட்டியை கழிவறைக்குள் அடைத்து வெளியே பூட்டு  போட்டுவிட்டு வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடி கொண்ட அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தாடி வைத்திருந்த நபர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் அருகில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு சென்றவுடன் தாடியை எடுத்துவிட்டு பெண்ணாக மாறி ரயிலில் ஏறி சென்றார். அந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த நிஷா தனது தங்கை ஜோதி தான் திருட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தார்.

பின்னர் போலீசார் ஜோதியை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஜோதி தனது தங்க நகைகளை அடமானம் வைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் 30 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தார். தற்போது ஜோதிக்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரத்தில் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்க நகைகள் எங்கே என கேள்வி எழுப்புவார்கள். அதனை சமாளிக்க ஜோதி ஆண் போல வேடமிட்டு தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்த 1.5 கோடி மதிப்புள்ள  தங்க ஆபரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.