பிக் பாஸ் சீசன் 19 ஆகஸ்ட் 24, 2025 அன்று கலர்ஸ் டிவியில் தொடங்கவுள்ள நிலையில், போட்டியாளர்களின் பட்டியல் குறித்த ஊகங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவியும், பிக் பாஸ் OTT 2 வெற்றியாளர் எல்விஷ் யாதவின் முன்னாள் கல்லூரி தோழியுமான ஹிமான்ஷி நர்வால் நிகழ்ச்சியில் சேரக்கூடும் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

தயாரிப்பாளர்கள், பார்வையாளர்களுடன் உடனடியாக இணையும் போட்டியாளர்களை சேர்க்க விரும்புவதாகவும், அதற்காக ஹிமான்ஷி குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. சில சமூக ஊடக தகவல்கள், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கின்றன.

இந்தாண்டின் தொடக்கத்தில், ஹிமான்ஷியின் பெயர் நாடு முழுவதும் கவனத்தை பெற்றது. ஏப்ரல் 22, 2025 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், அவரது கணவர் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உயிரிழந்தார். அந்த நேரத்தில் இருவரும் தேனிலவில் இருந்தனர்.

கணவரின் உடலருகே அமர்ந்து, ஆறாத துயரத்தில் அழும் ஹிமான்ஷியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, தேசம் முழுவதும் உணர்ச்சியைத் தூண்டியது. பின்னர், எல்விஷ் யாதவ் தனது வீடியோவில் ஹிமான்ஷி தனது கல்லூரி தோழி என்றும், 2018க்குப் பிறகு இருவரும் தொடர்பில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 19 தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இறுதி போட்டியாளர் பட்டியல் குறித்த ஊகங்கள் ரசிகர்கள் மத்தியில் சூடாக பேசப்பட்டு வருகின்றன. கலர்ஸ் டிவி இதுவரை எந்தப் பெயரையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும்,

ஹிமான்ஷி நர்வால் போட்டியாளராக வந்தால், அவரது துயரக் கதை மற்றும் உணர்ச்சிபூர்வமான பின்னணி இந்த சீசனின் முக்கிய அம்சமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள், ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும் பெரிய அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.