கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாபுரம் கல்பாறை பொற்றை பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுக்கு சாக்லேட் வழங்கினார். அவர் கொண்டு வந்த மூன்று சாக்லேட் பாக்கெட்டுகளில், ஒன்றின் காலாவதி தேதி முடிந்திருந்தது.

அந்த பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு, தற்போது 7 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மிட்டாய் கடைக்கு சென்று, சாக்லேட் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அங்கு பயன்படுத்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் கப் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.