நாடு முழுவதும் ஆகஸ்ட் 9ஆம் தேதி (சனிக்கிழமை) ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட உள்ளது. சகோதரத்துவத்தின் அடையாளமாக, சகோதரர்களின் மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கட்டி, அன்பையும் பாதுகாப்பையும் விரும்புவதை நினைவூட்டும் இவ்விழாவை, பலரது வாழ்க்கைச் சம்பந்தங்களோடு இணைத்து கொண்டாடுகின்றனர்.
அதில் முக்கியமாக பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் பிறந்து, தற்போது அகமதாபாத்தில் வசிக்கும் கமர் மொஹ்சின் ஷேக் என்ற பெண், கடந்த 30 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டும் மரபை தொடர்ந்து வருகிறார். மோடி ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து, இவர் அவருக்கு தன்னைச் சகோதரி எனக் கருதி ராக்கி கட்டி வருவது, அன்பின் அழுத்தமான உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டும், ஓம் மற்றும் விநாயகர் வடிவங்களில், தனக்கே உரிய முறையில் வீட்டிலேயே இரண்டு ராக்கிகளை கையால் தயாரித்து உள்ளார். “நான் ஒருபோதும் சந்தையில் இருந்து ராக்கி வாங்கியதில்லை; பிரதமருக்காக என் கையால் செய்கிறேன்” என உருக்கமாக கூறும் கமர் மொஹ்சின் ஷேக், கடந்த ஆண்டு டெல்லிக்கு செல்ல முடியாமல் தவித்ததாகவும், இந்த ஆண்டாவது பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அழைப்பு கிடைத்ததும் கணவருடன் டெல்லி சென்று பிரதமரின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவேன் என்றும், “மோடி அவர்கள் 4வது முறையாக பிரதமராக பதவியேற்பதை நான் நேரில் காண விரும்புகிறேன்” என்றும் கூறி உள்ளார். அவரது இந்த உணர்வுபூர்வ அணுகுமுறை, இந்து–முஸ்லிம் ஒற்றுமையின் உணர்வைத் தழுவியதாக சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெறுகிறது.
