கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான செபாஸ்டியன் சீரியல் கொலை குற்றச்சாட்டுகள் மாநிலத்தையே அதிரவைத்துள்ளது.  கடந்த காலத்தில் ஜெயினம்மா என்ற பெண் காணாமல் போனதையடுத்து, அவரது கணவர் அப்பச்சன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் செபாஸ்டியனை கைது செய்திருந்தனர்.

ஜெயினம்மா படுகொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் அவர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டாலும், பின்னர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அதே பகுதியில் மேலும் மூன்று பெண்கள் மர்மமாக காணாமல் போயுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சேர்தலா அருகே பள்ளிப்புரத்தில் உள்ள செபாஸ்டியனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், 20க்கும் மேற்பட்ட மனித எலும்புகளின் பாகங்கள், பற்கள், பெண்களின் ஆடைகள், கைப்பைகள் மற்றும் ரத்தக் கறைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

இந்த அனைத்து சாட்சியங்களும் தடய அறிவியல் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைைக்கப்பட்டுள்ளன. இது செபாஸ்டியனின் வீடு ஒரு கொலை கூடமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மேலும், கடந்த 2006ம் ஆண்டு காணாமல் போன பிந்து பத்மநாபன் மற்றும் 2012ல் காணாமல் போன ஆயிஷா ஆகிய இரண்டு பெண்கள் தொடர்பான வழக்குகளையும் ஆலப்புழா மற்றும் கோட்டயம் குற்றப்புலனாய்வு பிரிவுகள் இணைந்து விசாரித்து வருகின்றன. செபாஸ்டியனுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் யாரென்னும் கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.