ஹிமாசல்பிரதேசத்தின் குள்ளு மாவட்டம், சைஞ்ச் பகுதியில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆற்றில் உயிரை பணையம் வைத்து கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் நிகில் சைனி என்ற பயனர் பகிர்ந்துள்ளார்.
இதில், “இது ஓர் எம்எல்ஏவின் வீட்டுக்குச் செல்லும் பாதையாக இருந்தால், அரசாங்கமும் நிர்வாகமும் பாலம் கட்டி இருப்பார்கள். ஆனால் பொதுமக்களுக்கு இதுபோன்ற கவனமில்லை. ஒருவர் அல்லது இருவர் உயிரிழந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்கள்,” என விமர்சித்துள்ளார்.
Video from Sainj in Kullu district—children risking their lives just to study . If this were the path to a neta ji’s house, the govt and administration would’ve formed a human bridge or laid in the river themselves. But for the common man, until 1–2 die, no one gives a damn. pic.twitter.com/UWtujbKnh3
— Nikhil saini (@iNikhilsaini) August 4, 2025
இந்த வீடியோக்கு நடிகையும், மண்டி தொகுதியைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார். “இந்த வீடியோ மிகவும் இதயத்தை உடைக்கும் வகையில் உள்ளது. ஆனால் இதே இடத்திற்குச் செல்ல திர்த்பாணி வழியாக மாற்றுப்பாதை உள்ளது.
என் குழுவினர் ஷாம்ஷி வனப்பகுதி பிரிவு வன அலுவலரிடம் (DFO) பேசினர். இது தேசிய வனப் பூங்கா பகுதியில் வருகிறது, எனவே இது வனத்துறையின் கீழ் உள்ளது. வானிலை உகந்த நிலையில் 3-4 நாட்களில் பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கும் என அதிகாரி உறுதியளித்துள்ளார்,” என கங்கனா பதிவிட்டுள்ளார்.
கங்கனாவின் பதில், சமூக வலைதளங்களில் வரவேற்கப்பட்டு வருகிறது. ஒருவர், “உங்கள் வேலையை இவ்வளவு விரைவாக கவனித்ததற்காக நன்றி. இதற்காகத்தான் நான் உங்களை நேசிக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “மிகச் சிறந்த மற்றும் முன்கூட்டிய பதில். இது போன்றதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.
அதேபோல், இன்னொருவர், “பாலம் கட்டும் பணி முடிந்த பிறகு மக்கள் பாதுகாப்பாக செல்லும் வீடியோவும் பகிர்ந்து மகிழுங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் இடையே அரசியல்வாதிகளின் செயல்திறன் குறித்த எதிர்பார்ப்பு வளர்ந்து வரும் சூழலில், கங்கனாவின் துரித நடவடிக்கை பாராட்டை பெற்றுள்ளது.
வீடியோ வெளியான பின்னர் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளதால், அப்பகுதி மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது
