சத்தீஸ்கர் மாநிலம் பலோத்பஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், தெருநாயால் மாசுபடுத்தப்பட்ட காய்கறிகள் பயன்படுத்தப்பட்டதால், மதிய உணவு சாப்பிட்ட 78 மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
ஜூலை 29ஆம் தேதி, பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை அருகே காய்கறிகளை ஒரு தெருநாய் நக்கியிருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்திருந்த போதும், அதனை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்த தகவல் கிராம மக்களுக்கு தெரிய வந்ததும், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு வந்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.
புகாருக்கு பிறகும் மாணவர்களுக்கு அந்த உணவையே வழங்கியதாக கூறி, பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் பதில் கேட்டனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சமையலறை மேலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சுகாதாரத்துறை குழுவும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு உடல் நல பாதிப்புகள் எதுவும் இல்லை என உறுதி செய்தது. இருப்பினும், எச்சரிக்கையாக 78 மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நிர்வாகம் பின்பற்றுகிறதா என்கிற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் ஆரோக்கியத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய முடியாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
