ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (வயது 24), தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கிராம சர்வேயராக பணியாற்றும் ராம்பாபு என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் ஆன பிறகு மாதம் ஒரு முறை கூட அமைதியாக வாழ விடாமல் ராம்பாபு மது அருந்தி வந்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவரது மனைவியை அடிக்கடி துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

கொடுமைகள் காரணமாக தற்கொலை:
தொடர்ச்சியான தவறான வார்த்தைகள், “இவளுக்கு எந்த திறமையும் இல்லை” என வேறொரு பெண்ணின் முன்னிலையில் பேசியது உள்ளிட்ட சம்பவங்கள் ஸ்ரீவித்யாவை மனமுடைந்து போகச் செய்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக ராம்பாபுவின் நடத்தை மேலும் மோசமானதாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது துன்பங்களை சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்ரீவித்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.

உணர்ச்சிமிகு கடிதம்: 
அந்த கடிதத்தில், “என்னால் உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகளை பொறுக்க முடியவில்லை. எனது மரணத்திற்குக் காரணம் என் கணவரும் அவரது குடும்பத்தினரும் தான். அண்ணா… இந்தமுறை உனக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாட முடியாது” என மன வேதனையுடன் எழுதி வைத்திருந்தார். அவருடைய கடைசி வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பரவ, பலர் மனம் பிளக்க துயரமடைந்துள்ளனர்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஸ்ரீவித்யாவின் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அவரது கணவர் ராம்பாபுவையும், குடும்பத்தினரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். கடந்த 6 மாதங்களில் ஆந்திராவில் திருமணமான 24 பெண்கள் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இத்தகைய கொடுமை சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது சமூகத்தில் பெண்களுக்கு மீதான பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறது.