உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத் நகரில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நாக்பனி பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர் பாலியல் முறையில் தொந்தரவு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வீடியோவில், அந்த பெண் தனியாக சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த ஒரு நபர், திடீரென அந்த பெண்ணை தொட கூடாத தகாத  முறையில் தொட முயன்றுள்ளார். சுதாரித்து கொண்டு தன்னைக் காப்பாற்ற அந்த பெண் முயன்றதும், அந்த நபர் உடனே தப்பிச் சென்றதும் தெளிவாக காணப்படுகிறது. சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மொரடாபாத் காவல்துறையினர் செயலில் இறங்கினர். நாக்பனி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொறுப்பாளருக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மூன்று விசாரணை அணிகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.