மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள பெனாபட்டி தகன மைதானத்துக்குள் குழந்தைகளுக்கான ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை நகராட்சி நிறுவியுள்ளது.

இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் விகாஸ் அகாடி (BVA) உறுப்பினர்கள் பேய்கள் வேடமணிந்து, வசாய் நகராட்சி அலுவலகத்தில் அதிர்ச்சிகரமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வார்டு குழு I அலுவலகத்திற்குள் பேய் வேடத்தில் நுழைந்தவர்கள் அதிகாரிகளை பதறவைத்தனர்.

“உயிருடன் இருந்தபோது விளையாட முடியவில்லை; இப்போது மரணத்துக்குப்பிறகு விளையாட்டு மைதானம் கிடைத்தது” என்ற நக்கலான வாசகத்துடன், நகராட்சியின் செயலை விமர்சித்த அவர்கள், தகன மைதானத்தில் விளையாட்டு உபகரணங்களை நிறுவுவது சரியல்ல என்று கண்டித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் முன்னாள் மேயர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பால்கர் மக்கள் தங்களது புனித இடமான தகன மைதானத்தில், பொழுதுபோக்கு உபகரணங்கள் நிறுவப்படுவது என்பது பாரம்பரியத்தையும் மரியாதையையும் இழிவுபடுத்தும் செயல் என கூறுகிறார்கள். நகராட்சி இந்த உபகரணங்களை அகற்ற வேண்டும் மற்றும் இனி இப்படியான தவறுகள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.