மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர் மாணிக்ராவ் கோகட்டேவிடம் இருந்து வேளாண்துறை பதவி பறிக்கப்பட்டது. அதன் பின் அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே என்பவர் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அமைச்சர் தனது செயல்களை நியாயப்படுத்துமாறு பேசி உள்ளார். அதாவது கேமரா இருப்பது எனக்கு தெரிந்தால், நான் ஏன் அங்கு அமர்ந்து விளையாட வேண்டும். நான் அதை தவிர்க்க விரும்பினேன். இரண்டு முறை முயற்சித்தேன். விளையாட்டை தவிர்ப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அடுத்த நொடியில் நான் அதை தவிர்த்து விட்டேன் என்று கோகேட் கூறினார். இந்நிலையில் அவருக்கு தண்டனையாக வேளாண்துறை பதவி பறிக்கப்பட்டு அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக விளையாட்டு துறையை கையாண்ட தத்தத்ராயா பார்னே வேளாண் துறையை நிர்வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.