உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் நிகழ்ந்த ஒரு சம்பவம், சமூக வலைதளங்களில் பரவலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த சௌமியா காஷ்யப் என்ற பெண், தனது கணவர் அனுராக் சிங் மற்றும் அவரது மைத்துனர் மற்றும் உறவினர்கள் தன்னை தொடர்ந்து மன மற்றும் உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, “இன்று நான் உயிரை மாய்க்கிறேன்” என்ற வார்த்தைகளுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், சௌமியா, “என் கணவர் அனுராக் சிங் மீண்டும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது மைத்துனர் சஞ்சய் காவல்துறையில் பணியாற்றுகிறார். மற்றொருவர் ரஞ்சித் வழக்கறிஞராக இருக்கிறார். அவர்கள் என்னை தொடர்ந்து சித்திரவதை செய்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர். இன்று நான் உயிரிழந்தால், அதற்குப் பொறுப்பாளிகள் இவர்கள்தான்” என அழுதபடி கூறியுள்ளார். மேலும், “இவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தால் எதையும் செய்யக்கூடியவர்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பி.கே.டி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சௌமியாவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சம்பவம் குறித்து அவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் லக்னோவிற்கு புறப்பட்டு வந்தனர். தற்போது போலீசார் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் என்றும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
