மும்பையை அடுத்த நவிமும்பை பகுதியில் உள்ள பேலாப்பூரில் இருந்து உல்வே நோக்கி ஒரு பெண் தனது தனிப்பட்ட காரில் நள்ளிரவு 1 மணியளவில் சென்றுள்ளார். புதிய இடம் என்பதால், தன்னுடைய போக்குவரத்துக்கான வழியை ‘கூகுள் மேப்’ மூலம் பார்த்தபடி காரை ஓட்டியுள்ளார். வழிமுறை சரியாக தெரியாத நிலையில், அந்தப் பெண் துருவ்தரா படகுத்துறைமுகம் பகுதியில் வந்தபோது, மேப்பில் பாதை நேராக இருப்பதாக காட்டியதால், அது பாலம் என்று நினைத்து காரை கீழ்ப்பகுதி வழியாக ஓட்டினார்.

விரைவில் அந்த பாதை திடீரென முடிந்ததும், அந்த இடம் கடலின் முகத்துவார பகுதி என்பது தெரிய வந்தது. கார் வேகமாக கடலுக்குள் சென்றது. ஆபத்தான இந்த சூழ்நிலையில், காருடன் மூழ்கும் நிலையில் இருந்த அந்த பெண் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினார். அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக, கடல் பாதுகாப்பு படையினர் (Coast Guard) அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அவர்கள் உடனடியாக படகில் சென்று, அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர், கடலில் முழுமையாக மூழ்கிய கார் கிரேன் மூலம் மேலே தூக்கி எடுக்கப்பட்டது. விபத்து நடந்தது தொடர்பான அந்த பெண் குறித்து போலீசார் இதுவரை தகவல் வெளியிடவில்லை. ஆனாலும், தனது உயிரைக் காப்பாற்றிய கடற்படை வீரர்களுக்கு அந்த பெண் நன்றி தெரிவித்தார். சீரற்ற வழிகாட்டுதலால் உயிர் நழுவிய சமயத்தில், வீரர்களின் வேகமான செயல்திறமை ஒரு மனித உயிரைக் காப்பாற்றியதாய் பெருமையாக பார்க்கப்படுகிறது.