கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இளம்பெண் ஒருவரை நடுத்தெருவில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. முகமது மாரூப் ஷரீஃப் எனப்படும் நபர், மளிகைப்பொருட்கள் வாங்க வெளியே சென்ற பெண்ணை பின்தொடர்ந்து, அவரை நோக்கி ஆபாச சைகைகள் செய்துள்ளார்.
தொடர்ந்து, வலுக்கட்டாயமாக அவரை முத்தமிட்டதுடன், அவரது உதட்டையும் கடித்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் நிகழ்ந்த இந்த செயல், அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தப்பித்து ஓடிய அந்த பெண், சம்பவத்தை தனது தாயிடம் கூறியதை அடுத்து, கோவிந்தபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், போலீசார் முகமது மாரூப் ஷரீஃஃவை கைது செய்தனர். அவர்மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பொது இடத்தில் அநாகரீகமான நடத்தை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நடைபெறும் முன், ஏப்ரல் மாதத்திலும் பெங்களூருவின் பி.டி.எம் லேஅவுட் பகுதியில் ஒரு ஆண், இரண்டு பெண்களைப் பின்தொடர்ந்து ஒருவர் மீது தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி, வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜூன் மாதத்திலும் பெங்களூருவின் குக் டவுன் மில்டன் பூங்கா அருகே, ஒரே நபர் இரண்டு பெண்கள் மீது தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் இடம்பெற்றது. இதில், ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து, வலுக்கட்டாயமாக முத்தமிட்ட அந்த நபர், “யாரிடமும் சொன்னாலும் எந்த வித்தியாசமும் வராது” என தைரியமாகச் சொன்னதாக தகவல்.
இந்தச் சம்பவங்கள் பெங்களூருவில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி, பொதுமக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பை அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
