மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மனிதநேயம் குலைந்த கோர சம்பவம் ஒன்று தற்போது வெளியானதுடன், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 14 வயது சிறுமி ஒருவருக்கு தீவிர வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது மருத்துவமனை நிர்வாகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சிறுமியின் குறைந்த வயதும், உடல்நிலை பாதிப்பும் கவனத்தில் கொண்டு உடனடியாக அவளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, சட்டப்படி இது குறித்து உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சிறுமி அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தன் பயோலாஜிக்கல்  தந்தை தன்னை பலத்த மிரட்டலோடு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக சிறுமி கூறியுள்ளார்.

இந்த கொடூரம் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கியது என்றும், அப்போது தான் தந்தை தனது மீது தவறான நோக்கத்துடன் நடந்துகொண்டு, தொடர்ந்து பலமுறை உறவை கட்டாயப்படுத்தியதாகவும், பயத்தில் எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்து வந்ததாகவும் சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் குற்றவாளியான தந்தைக்கு எதிராக POCSO சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளியான தந்தை தப்பி ஓடிய நிலையில், போலீசார் அவரை தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதேபோல், இன்னொரு சம்பவமாக, போபாலில் தனது 12 வயது அக்காவின் மகளுடன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் குழந்தைகள் மீதான பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளன. சமூக விழிப்புணர்வு மற்றும் சட்ட அமலாக்கத்தின் கடுமை ஆகியவை இத்தகைய செயல்களுக்கு தடையாக அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.