பெங்களூருவில் நெஞ்சை பதறவைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை, அதே கல்லூரியில் பணியாற்றும் இரு விரிவுரையாளர்களும், அவர்களின் நண்பரும் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மரத்தஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நரேந்திரா, சந்தீப் உட்பட மூவரும், மேங்களூருவில் உள்ள மூடபிட்ரி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் பிஸிக்ஸ் மற்றும் பயாலஜி பாடங்களை கற்பித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் நரேந்திரா, மாணவியுடன் நெருக்கம் காட்டி நம்பிக்கை பெற்றதாகவும், பின்னர் பெங்களூருவில் உள்ள மரத்தஹள்ளி பகுதியில் உள்ள தனது நண்பர் அனூப்பின் அறைக்கு அழைத்து சென்று, கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வெளியே கூற கூடாது என நரேந்திரா மிரட்டியதையடுத்து, சில நாட்களுக்குப் பிறகு சந்தீப் என்ற மற்றொரு விரிவுரையாளர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர் எதிர்த்ததால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாக மிரட்டி, மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிகிறது.
பின்னர் அனூப் என்பவர் அந்த மாணவியை அழைத்து, “உன் அறைக்குள் சிசிடிவி வீடியோ இருக்கிறது” எனக் கூறி தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த கொடுமையை தாங்க முடியாமல் மாணவி தனது பெற்றோரிடம் உண்மையை வெளிப்படுத்தியதையடுத்து, அவர்கள் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்களின் ஆலோசனையின்பேரில் மாணவி போலீசில் முறையீடு செய்தார். மரத்தஹள்ளி போலீசார் இந்தக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கும்பல் இதுபோன்ற முறையில் மற்ற மாணவிகளையும் பாதித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
