கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரயில் வருவதை அறிந்து கேட்டை மூடுவதற்காக சென்றபோது பள்ளி வாகன ஓட்டுநர் மூடவேண்டாம் என்று கூறியதால் இந்த விபத்து நடந்துள்ளது. ரயில் ஓட்டுனர் மற்றும் கேட் கீப்பரின் அலட்சியத்தால் நடந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பங்கஜ் சர்மாவை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதைத்தொடர்ந்து தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கேட்டை மூடாமல் ஓட்டுநர் கேட்டதற்காக பள்ளி வாகனத்தை அனுமதித்ததற்காக அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்ததோடு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரணமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த செழியன் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதில் சாருமதி மற்றும் செழியன் உடன்பிறந்த அக்கா தம்பி. தங்களுடைய இரு பிள்ளைகளையும் இழந்து பெற்றோர் வேதனையில் தவிக்கிறார்கள். மேலும் இதன் காரணமாக பலி எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.