
இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள சியாதி கிராமம், ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பெரும் அழிவை சந்தித்துள்ளது. அந்த இரவில் ஏற்பட்ட கனமழையால் ஒரு பெரிய மலைத் துண்டு கீழே விழுந்ததில், ஒரு டஜன் வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன.
ஆனால், அந்த நேரத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நாய் திடீரென குரைத்து எச்சரித்ததனால், கிராம மக்கள் விழித்தெழுந்து தப்பிக்க முடிந்தது. இவ்வாறு 67 பேரின் உயிரை அந்த நாய் காப்பாற்றியது. இந்த தகவலை பகிர்ந்த நரேந்திரா என்பவர், “அந்த நாய் குரைக்காமல் இருந்திருந்தால் யாரும் உயிருடன் இருக்க முடியாது” என உணர்ச்சியுடன் கூறினார்.
அந்த இரவில் தங்கள் வீடுகளை விட்டு தப்பிய ஓடிய 20 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் தற்போது அருகிலுள்ள திரியம்பலா கிராமத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் கடந்த ஏழு நாட்களாக தஞ்சம் புகுந்துள்ளனர். கிராமத்தில் இப்போது நான்கு முதல் ஐந்து வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை குழுவும் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளது.
அவர்கள் தெரிவித்ததாவது, கோவிலில் தஞ்சம் புகுந்துள்ள மக்களில் பெரும்பாலும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் பலர், இப்பேரிடரால் ஏற்பட்ட அதிர்ச்சியால் மனச்சோர்வும், இரத்த அழுத்த பிரச்சனையும் போன்ற உடல்நிலை பாதிப்புகள் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேரழிவுக்குப் பின்னர், அருகிலுள்ள தர்பா கிராம மக்கள் பெரும் மனதுடன் உதவ முன்வந்துள்ளனர். ரேஷன் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், மற்றும் ₹21,000 பண நன்கொடையுடன் அவர்கள் திரியம்பலா கோவிலுக்கு வந்து சியாதி கிராம மக்களுக்கு உதவினர். அந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த நன்கொடை பெட்டியில், பலர் தங்களால் முடிந்த அளவு பண உதவிகளைச் செய்துள்ளனர்.
பஞ்சாயத்து உறுப்பினர் சுரேந்திரா தெரிவித்ததாவது, “அனைத்துப் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் சியாதி கிராமத்தில் வசிக்கிறார்கள்; அவர்களுக்கான வீடுகள் கட்ட நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையை பயன்படுத்தலாம்” என்றார். இந்த விபத்தில் அரசின் உதவி மட்டும் அல்லாமல், பொதுமக்களின் உள்ளார்ந்த ஒத்துழைப்பு, உதவிக்கரங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு சமூகத்தின் உண்மை மனிதநேயத்தைக் காட்டுகிறது.
அரசாங்கம் வழங்கிய ₹10,000 பேரிடர் நிவாரணத்துடன் சேர்த்து, தர்பா கிராம மக்கள் வழங்கிய ₹21,000 நன்கொடை, நம்பிக்கையின் எடுத்துக்காட்டாகவும், சுயநலம் இல்லாத ஒற்றுமையின் அடையாளமாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. பாராட்டுக்குரிய இந்த மனிதநேயம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் ஒரு சிறந்த சமூக நல நெருப்பாக பரவ வேண்டியது அவசியம்.