
உலகின் மிகவும் விஷம் கொண்ட பாம்பாகக் கருதப்படும் ராஜநாகம் ஒன்று கேரளத்தில் வெறித்தனமாக சுற்றித் திரிந்த நிலையில், அதை தைரியமாகவும், துல்லியமாகவும் கையாண்ட பெண் வனத்துறை அதிகாரி ரோஷ்னிக்கு பாராட்டு குவிந்துவருகிறது.
இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில், திருவனந்தபுரம் அருகே உள்ள பேப்பாரா வனவிலங்கு சரணாலயம் அருகேயுள்ள கரமணா ஆற்றில் குளிக்க வந்தவர்கள், நீரில் ராஜநாகம் தெரிந்ததை கண்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி, சிறப்புப் பயிற்சி பெற்ற ஐந்து பேர் கொண்ட குழுவுடன் பாம்பை பிடிக்கும் பணியில் இறங்கினார்.
#JUSTIN சிங்கப் பெண்ணே..!
திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள
குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள
ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி#Trivandrum #Kerala #KingCobra #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/HjQyVbnXyM— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 7, 2025
தூண்டில்கள் மற்றும் குச்சிகளை கொண்டு, சுமார் 18 அடி நீளமும் 20 கிலோ எடையும் கொண்ட ராஜநாகத்தை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு பாதுகாப்பாக மாற்றியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் 800க்கும் அதிகமான விஷ பாம்புகளை கையாண்ட அனுபவம் உள்ள ரோஷ்னி, இந்த செயலுக்காக கேரள மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
சில வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்கள், “பாம்பை கையாளும் போது தற்காப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் அவசியம். ரோஷ்னி வைத்திருந்த குச்சி பலமுறை கீழே விழுந்தது, இது போதுமான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பதைக் காட்டுகிறது” என விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
ராஜநாகத்தின் விஷம் 7 மில்லிலிட்டர் வரை இருக்கும்; இது சில நிமிடங்களில் மூளை நரம்புகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி, கோமா மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தி உயிரிழப்புக்கே காரணமாக மாறக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், சாதாரணமானவர்கள் கூட அச்சப்படும் சூழ்நிலையில், மக்களுக்கான பாதுகாப்பிற்காக உயிரை தியாகம் செய்யத் தயங்காத அதிகாரி ரோஷ்னியின் துணிச்சல் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டும், புகழும் பெருகி வருகிறது.