சீனாவின் தென்மேற்கு பகுதியைச் சேர்ந்த வென் ஹைபின் என்ற 28 வயது இளைஞர், தனது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மகளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கும் உணர்ச்சிபூர்வமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமும் காலை குடும்ப பராமரிப்பு, இரவில் நேரடி ஒளிபரப்புகளில் நடனம் – என இரட்டை சுமையுடன் போராடும் இந்த இளைஞரின் செயல்கள் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

வெனும் அவரது மனைவி யாங் சியாவோஹோங்கும் பள்ளி நண்பர்கள். திருமணத்துக்குப் பிறகு வேலை வாய்ப்புக்காக சிச்சுவானில் இருந்து குவாங்டாங் மாகாணத்துக்கு இடம்பெயர்ந்த இந்த தம்பதியருக்கு, மூத்த மகள் பிறந்த 1 வருடத்துக்குப் பிறகு, இரண்டாவது மகளும் பிறந்தாள். ஆனால் கடந்த ஆண்டு ஜூனில், இளைய மகளுக்கு ராப்டோமியோசர்கோமா எனப்படும் அரிதான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அதே ஆண்டின் டிசம்பரில், மனைவிக்கும் மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் இருவருக்கும் கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகள் தேவையாகி, ஆயிரக்கணக்கான யுவான் செலவாகும் நிலை உருவானது. தங்கள் சேமிப்புகள் முடிந்து, தற்போது 2 லட்சம் யுவான் வரை கடனில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், வென் கட்டுமானத் தள வேலையை முழுமையாக விட்டுவிட்டு , தன் மனைவி மற்றும் மகளுக்கே முழுமையாக நேரத்தை ஒதுக்க, பகலில் அவர்கள் பராமரிப்பிலும், இரவில் நேரடி ஒளிபரப்புகளில் நடனமாடியும் நிதி திரட்டத் தொடங்கினார். தொடக்கத்தில் வெட்கத்துடன் இருந்தாலும், 2 மாதங்களில் நடனத்தில் நன்கு தேர்ச்சி பெற்றார்.

அவருடைய ஆன்லைன் வீடியோக்கள் பார்வையாளர்களிடம் பரவலாக மகிழ்ச்சி ஏற்படுத்தியதால், தாராள நன்கொடைகளும் பெருகின. கூடவே, வீட்டு உரிமையாளர் கூட அவருடைய வீட்டு வாடகையை குறைத்துள்ளார். “நான் என் மனைவிக்கும் மகள்களுக்கும் ஒருபோதும் உதவி செய்யாமல் விடமாட்டேன்” என்ற உறுதி கொண்ட  வெனின் நம்பிக்கை பலருக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.

இத்தகைய போராட்ட வாழ்க்கை பாசத்தின் ஆழத்தையும், மனிதரின் துணிச்சலையும் வெளிக்கொணர்கிறது. சமூக வலைதளங்களில், “அவர் ஒரு அற்புதமான கணவர்,” “இந்த குடும்பத்தின் மீதான அர்ப்பணிப்பு உண்மையாகவே நெகிழ்ச்சியளிக்கிறது” என பார்வையாளர்கள் புகழ்ந்துள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு உயிர்களுக்கு மீள அர்த்தம் அளிக்கும் போராட்டத்தில் வென் தொடரும் என்ற நம்பிக்கையில், பலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.