உயிர்களை காக்கும் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டாலும், அவசர காலங்களில் அரிய ரத்த வகைகளைப் பெறுவது சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களிடமிருந்து தானமாக பெறும் ரத்தத்திற்கு மாற்றாக, அனைத்து ரத்த வகைக்கும் பொருந்தக்கூடிய செயற்கை ரத்தத்தை உருவாக்கி பரிசோதித்து வருகிறார்கள்.

இந்த செயற்கை ரத்தம், ஹீமோகுளோபினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இது இயற்கையாக பெறப்பட்ட ரத்தத்திலிருந்து காலாவதியான நிலையில் சேகரிக்கப்பட்ட ஹீமோகுளோபின் மூலமாக உருவாக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம் – அறை வெப்பநிலையில் 2 ஆண்டுகள், குளிர்சாதனத்தில் 5 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்கலாம். தற்போது பரிசோதனை கட்டத்தில் இருக்கும் இந்த செயற்கை ரத்தம், 16 ஆரோக்கிய தன்னார்வலர்களில் 100–400 மில்லி அளவில் செலுத்தப்பட்டு, உடல் உறுப்புகளில் செயல்பாடு எப்படி இருக்கிறது என ஆராயப்படுகிறது.

உலகளவில் ரத்த வங்கிகளில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. விபத்துகள், அறுவை சிகிச்சைகள், பிரசவங்கள், புற்றுநோய் போன்ற சூழ்நிலைகளில் தேவையான ரத்தம் உடனடியாக கிடைக்காததால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அரிய ரத்த வகைகள் கிடைக்காமல் தாமதம் ஏற்படுவது, அவசர மருத்துவ சேவைக்கு பெரும் தடையாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில், அனைத்து ரத்த வகைக்கும் பொருந்தக்கூடிய செயற்கை ரத்தத்தின் உருவாக்கம் மருத்துவ துறையில் புரட்சிகரமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என நம்பப்படுகிறது.

2023ல் தொடங்கிய இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தால், 2030ம் ஆண்டிலிருந்து ஜப்பானில் மருத்துவமனைகளில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் எந்த மூலையிலும் இத்தகைய ரத்தத்தை அனுப்பக்கூடிய தொழில்நுட்பமாக இது மாறும் எனவும், எதிர்காலத்தில் மருந்துக் கடைகளில் கூட விற்பனை செய்யப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

இதன் மூலம் ஜப்பான், செயற்கை ரத்தத்தை உலகத்துக்கு முதன்முதலாக வழங்கிய நாடாகும் பெருமையையும் அடையவிருக்கிறது.