மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் சுவரில் வெறும் நான்கு லிட்டர் எண்ணெய் வண்ணம் பூசுவதற்காக ரூ.1.07 லட்சம் செலவிடப்பட்டதாக கூறி 233 பேரின் பணியை காட்டிய ரசீது  ஒன்று வெளியாகியுள்ளது. இது சமூக ஊடகங்களில் பரவியதும், மாநில அரசியல் மட்டுமல்லாமல் மக்கள் மத்திலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஷாஹ்தோல் மாவட்டத்தின் சங்கடி கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்தது. பள்ளியின் சுவருக்கு நான்கு லிட்டர் எண்ணெய் வண்ணம் பூசுவதற்காக 168 தொழிலாளர்கள், 65 வண்ணப்பூச்சாளர்கள் வேலை பார்த்ததாக ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், நிபானியா கிராமத்தில் உள்ள மற்றொரு பள்ளியில், 20 லிட்டர் வண்ணப்பூச்சுக்கு ரூ.2.3 லட்சம் செலவிடப்பட்டு, 275 தொழிலாளர்கள் மற்றும் 150 வண்ணப்பூச்சாளர்கள் வேலை பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரசீதுகள் அதிகாரப்பூர்வ விதிமுறைகளை மீறி, புகைப்பட சான்றுகள் இல்லாமல் இருப்பது   மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பூல் சிங் மார்பாச்சி, “இவ்வாறு சமூக ஊடகங்களில் வைரலாகும் இரண்டு பள்ளிகளின் கட்டணச் சீட்டுகள் விசாரணையில் உள்ளன. உண்மை தெரியவந்ததும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிதிகளை களவாடும் இந்த வகை மோசடிகள் குறித்து மாநில அளவிலான விசாரணை தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.