
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து சினிமாத்துறை உலகில் பிரபல இயக்குனர் அமீர் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, நடிகர் பாக்யராஜின் மகனும், தமிழ் திரைப்பட நடிகருமான சாந்தனு தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, “போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி காலதாமதமாக பேசுவதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற விஷயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அஜித் குமாரின் மரணத்திற்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்று அடுத்து ஒரு சம்பவம் என தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும் இவை ஒருபோதும் மாறுவதில்லை என மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சி என்பதால் நடிகர், நடிகைகள் யாரும் இது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கவில்லை மௌனம் காக்கின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நிலையில், தற்போது நடிகர் சாந்தனு “ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற நிலைமை மாறாது” என்பது போன்ற அதிருப்தி பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.