குஜராத்தின் டாஹோட் மாவட்டத்தில் உள்ள ஆசைதி கிராமம் அருகே உள்ள அகமதாபாத்-இந்தோர் நெடுஞ்சாலையில் நடந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை சோதனைச் சாவடியில் நிறுத்த மறுத்ததாக கூறி, லாரி டிரைவர் நசிர்பாய் என்பவரை மாநில போக்குவரத்து துறை (RTO) அதிகாரி வி.கே.பர்மர் மற்றும் அவரது இருவர் உதவியாளர்கள் கொடூரமாக அடித்துள்ளனர்.

நிற்காமல் சென்ற  லாரி சக்கரத்தில் தடுப்பு கம்பியை வீசி சக்கரத்தை துளைத்து லாரியை நிறுத்திய அதிகாரிகள், பின்னர் நசிர்பாயை வலுக்கட்டாயமாக லாரியிலிருந்து இழுத்து வெளியேற்றினர்.

அதன்பின், குச்சியால் தாக்கினர். இந்த கொடூரமான காட்சியை அருகே சென்ற வினேஷ்பாய் ராவத் என்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நசிர்பாய், “நான் லாரியை நிறுத்தாமல் பிழை செய்ததை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தத் தயார் என்றேன். ஆனால் அவர்கள் என் குரலையும், மனதையும் தவிர்த்து, கொடூரமாக அடித்தனர்,” எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் மக்கள் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிகாரத்தை தவறான பயன்படுத்துவதாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த சம்பவம், பொதுமக்கள் மீதான அதிகாரிகளின் அக்கறையற்ற நடத்தை குறித்து சுட்டிக்காட்டி, வன்முறைக்கு எதிராக வலிமையான சட்ட நடவடிக்கை தேவைப்படுவதை மீண்டும் உணர்த்தியுள்ளது.