பாகிஸ்தானின் லாஹூரில் இருந்து நடந்த நம்ப முடியாத விலங்கு தாக்குதல் சம்பவம் வெளியானது. ஜூலை 3-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்த பரிதாப சம்பவத்தில், வீட்டில் வளர்க்கப்பட்ட 11 மாத ஆண் சிங்கம் ஒன்று திடீரென சுவர் மீது ஏறி தெருவில் இருந்த பெண் மற்றும் குழந்தைகள் மீது பாய்ந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, மக்கள் கோபத்தையும் கவலையையும் கிளப்பியுள்ளது.

சிங்கம் பாய்ந்ததில் பாதிக்கப்பட்ட சிலர் காயமடைந்துள்ளனர். சிங்கத்தை வளர்த்து வந்த வீட்டில் இருந்தவர்கள், அந்த சம்பவத்தை பார்ப்பதிலும் மகிழ்ச்சி கொண்டதுபோல் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஒரு பாதிக்கப்பட்டவரின் தந்தை, “எங்கள் குழந்தைகள் மீது சிங்கம் பாய்ந்தது. ஆனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் சிரித்துக்கொண்டே பார்த்தனர்,” என்று தம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இந்த சம்பவத்திற்கு பின்னர், போலீசார் விரைந்து சென்று சிங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அந்த விலங்கை லாஹூரிலுள்ள வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றியுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்புக்கு மாறாக, புலிகள், சிங்கங்கள் போன்ற ஆபத்தான விலங்குகளை வீடுகளில் வளர்ப்பதை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்றும், உரிமையாளர்களிடம் இருந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.