
தமிழகத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களை உருவாக்குவதற்கும், நியமிப்பதற்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், 28 ஊரக மற்றும் 22 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன. இதனையடுத்து, தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநரின் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி,
🔹 78 மருத்துவர்கள் – மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்க அனுமதி
🔹 56 செவிலியர்கள் – நிரந்தர அடிப்படையில் பணி ஒப்பளிப்பு
🔹 400 மருத்துவப் பணியாளர்கள் – ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக நியமனம்
மேலும், இவர்கள் அனைவருக்கும் ஊதியத் திட்டம், நியமன விவரங்கள், பணிநிபந்தனைகள் உள்ளிட்டவற்றுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள், மாநிலத்தின் அடிப்படை சுகாதார அமைப்பை பலப்படுத்தும் வகையில் செயல்படும் எனவும், மக்களுக்கு நேரடி பயன்பாடாக அமையும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.