உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாதில் நடந்த ஒரு பயங்கர சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள் ஷோ ரூமின் இரும்பு ஸ்லைடிங் வாசல் திடீரென கீழே விழுந்ததில், அங்கு பணியாற்றி வந்த பாதுகாப்பு காவலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த விபத்து ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கட்கர் போலீஸ் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு ஷோ ரூமில் நடந்துள்ளது. அப்போது அங்கு யாரும் இல்லாத நேரத்தில், மிகவும் கனமான இரும்பு ஸ்லைடிங் வாசல் திடீரென சரிந்து விழுந்தது. அதே சமயம் அருகில் இருந்த பாதுகாப்பு காவலாளி ரவீந்திரகுமார் சிங் அந்த வாசலின் கீழே சிக்கி உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால் உடனடி உதவி கிடைக்கவில்லை. பின்னர் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த கோரமான சம்பவம் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத கட்டிடங்களின் குறையை வெளிக்கொணர்ந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.