தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் மீனவர் பிரச்னையுடன் இணைந்து தலைவலி  உண்டாக்கி வரும் நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத், “கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இல்லை” என திடமாக தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு மற்றும் பாக் நீரிணை அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் முக்கிய பிரச்னையாக அமைந்துள்ளது. மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சில சமயங்களில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் என தமிழக மீனவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 1974-ஆம் ஆண்டு, இந்தியா-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ், மக்கள் வசிக்காத கச்சத்தீவு தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீனவர் பிரச்னையை சமாதானமாகத் தீர்க்க தூதரக மட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறிய அமைச்சர் விஜிதா ஹெராத், “ஆனால் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கும் சாத்தியமே இல்லை. அந்த உரிமை சர்வதேச சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இந்தப் பார்வை, தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும், மீனவர் சங்கங்களின் எதிர்மறையான எதிர்வினைகளையும் தூண்டும் என்று கருதப்படுகிறது