
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமப் பகுதியில் சீனிவாச ராவ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீனிவாச ராவ் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ளதால் வேலை செய்வதற்காக கடந்த 5 நாட்களுக்கு முன் தனது மனைவியுடன் கிராமத்திற்கு சென்றார்.
அப்போது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த திருடன் ஒருவன் வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றுள்ளார். அதன் பின் திருடிய பொருட்களை விற்று அதில் வரும் பணத்தில் மது அருந்திவிட்டு திருடிய வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். கடந்த 5 நாட்களாக திருடன் அந்த வீட்டில் தூங்கி வந்த நிலையில் அருகில் வசித்து வருபவர்கள் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி வீட்டிலில்லாத நேரத்தில் விளக்கு எறிவதை கண்டு சந்தேகம் அடைந்தனர்.
உடனடியாக சீனிவாச ராவின் மகனுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் தனது தந்தை மற்றும் காவல் துறையினருக்கு தெரிவித்தார். அதன்படி சீனிவாச ராவின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த திருடனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் பிடரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்பது தெரிய வந்தது.அதோடு காவல்துறையினரிடம் “பூட்டப்பட்ட வீடுகளில் திருடிவிட்டு அங்கேயே தூங்கி விடுவேன்” என்று கூறியுள்ளார். மேலும் திருடனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.