
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஜெயராமன்(85), பலராமன்(80) என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயியாக இருந்துள்ளனர். இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களது மனைவிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பலராமன் கால் முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருந்து வந்துள்ளார். அண்ணன் வழக்கம்போல் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பலராமன் இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் மனவேதனையில் இருந்த ஜெயராமன் சுமார் 7 மணி நேரம் கழித்து தம்பியின் உடல் அருகே அவரும் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த அண்ணன் மற்றும் தம்பிக்கு ஒரே வீட்டில் வைத்து சடங்குகள் செய்யப்பட்டு சுடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்தனர். அண்ணன், தம்பியாக ஒரே வீட்டில் பிறந்து 80 ஆண்டு காலமாக வளர்ந்து தற்போது ஒரே நாளில் 2 பேரும் உயிரிழந்திருப்பது பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.