நெல்லை மாவட்டம் மேலபாளையத்தில் உள்ள 5 வயது சிறுவன் ஒருவன், ரம்புட்டான் பழம் சாப்பிட்டபோது அதில் இருந்த விதை தொண்டையில் சிக்கிய காரணத்தால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ரியாஸ் என்ற பெயருடைய அந்த சிறுவன், தனது வீட்டில் ரம்புட்டான் பழம் சாப்பிட்டு வந்த போது இந்த துயரச்சம்பவம் நேர்ந்துள்ளது.

சம்பவ விவரங்களின்படி, சிறுவன் ரியாஸ் பழத்தை முழுமையாக வாயில் போட்டு சாப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில், பழத்தின் விதை தொண்டையில் திடீரென சிக்கி, சுவாசக்குழாயை அடைத்துவிட்டது. இதனை பார்த்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவத்துறை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே கணத்தில் சிரித்துக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் சாவை தொடர்ந்து, “பழங்களை சாப்பிடும் போது பெற்றோர் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்” என மருத்தவர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிகழ்வு, குழந்தைகள் சாப்பிடும் பழங்கள், விதை உள்ளவை என்றால் அவற்றை முறையாக வெட்டி தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வாகவும் பார்க்கப்படுகிறது