
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், மீண்டும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கடந்த மே மாதத்தில் 6,000 பேர் வரை பணிநீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்த இரண்டு மாதங்களில் 9,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்க உள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாஃப்ட் ஊழியர்களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
2024-இன் ஜூன் மாத நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மொத்தமாக 2,28,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்தியாவிலேயே சுமார் 20,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது நடைபெறும் பணிநீக்க நடவடிக்கைகள் அனைத்துலக அளவில் நடை பெறும் என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் உள்ளவர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர்.

இந்த ஆள் குறைப்பு நடவடிக்கைக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சொல்வது என்னவென்றால், உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலை மற்றும் நிறுவன செலவுகளை கட்டுப்படுத்தும் திட்டம் என்பதுதான்.
இதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிக முதலீடுகள் செய்யப்படும் என்பதால், செலவுகளை சமநிலைப்படுத்த ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து தொடர் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மைக்ரோசாஃப்ட், தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இத்தகைய கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
ஆனால், மனிதவளத்தின் மீது எதிரொலி ஏற்படுத்தும் இந்த முயற்சிகள், வேலைவாய்ப்பு நிலைத்தன்மையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதால், தொழில்துறையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.