உத்தரபிரதேச மாநிலம் அவுரியாவின் சதார் கோட்வாலி பகுதியில், இளைஞர் ஒருவர் இறந்தவரென கருதி அடக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தவறாகக் கண்டறிந்ததால், தற்போது அடக்கம் செய்யப்பட்ட நபர் யார்? என்பது காவல்துறைக்கு புதிராக உள்ளது.

ஜூன் 27ஆம் தேதி, சதார் கோட்வாலி பகுதியில் உள்ள பூர்வா ரஹத் கிராமத்தில் அமைந்துள்ள செங்கல் சூளைக்கு அருகே, 40 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்ட அந்த நபர், சில நாட்களாக அந்த கிராமத்தில் சுற்றி திரிந்ததாக மக்கள் தெரிவித்தனர். உடல் கண்டெடுக்கப்பட்டதும், போலீசார் அந்த நபரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்தப் புகைப்படத்தை பார்த்த செங்கன்பூரை சேர்ந்த சம்சுலும், அவரது பக்கத்து வீட்டுக்காரர் யூசுப் கானும், உடலைக் கண்டுபிடிக்க போலீசுடன் பிணவறைக்கு சென்றனர். அங்கு உடலின் முகத்தை பார்த்த சம்சுலின் மருமகன் நூர் முகமது என அடையாளம் கண்டனர். நூர் முகமது மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்கி, இரவு நேரத்தில் கல்லறையில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், சம்பவத்திலிருந்து சில நாட்களுக்குப் பிறகு, நூர் முகமது தன்னுடைய குடும்பத்துடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அவர் “முஹர்ரம் நாளில் வீட்டுக்கு வருகிறேன்” என கூற, குடும்பத்தினரும் கிராமத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் போலீசாரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. நீர் முகமது உயிருடன் இருக்க, அதே நேரத்தில் யார் உடலை புதைக்கப்பட்டது என்பது தற்போது போலீசாருக்குப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி மகேந்திர பிரதாப் சிங் கூறுகையில், “நூர் முகமது உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் முக ஒற்றுமை இருப்பதால் தவறான அடையாளம் ஏற்பட்டிருக்கலாம். முழுமையான விசாரணையுடன், அடக்கம் செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் குறித்து மேலதிக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.