அமெரிக்காவின் டெலவேர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெனிபர் ஆலன் என்ற 35 வயதுடைய பெண், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT உதவியுடன் தனது நிதி சுமையை குறைத்து, 30 நாட்களில் சுமார் $12,000 (ரூ.10.3 லட்சம்) கடனை அடைத்துள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது AI தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாடாக பலருக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

ரியல் எஸ்டேட் விற்பனையாளர் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பாளராகச் செயற்பட்டு வந்த ஜெனிபர், வருமானம் இருந்தாலும், மருத்துவச் செலவுகள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாடுகள் காரணமாக கடனில் சிக்கியிருந்தார். குழந்தை பிறந்த பிறகு மருத்துவ அவசரநிலைகள், பராமரிப்பு செலவுகள் ஆகியவை காரணமாக, தனது குடும்பம் ஆடம்பரமாக வாழாதபோதும், வாழ்க்கையை நடத்துவதற்கே போராடியதாகவும், கணக்குகள் சரியாக இல்லாததால் கடன் நிலை மோசமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் ChatGPT உதவியுடன் “30 நாள் நிதி சவால்” (30-Day Finance Challenge) எனும் திட்டத்தை அவர் துவக்கியுள்ளார். தினமும் ChatGPT-யிடம் “இன்றைய நிதி நடவடிக்கை என்ன?” எனக் கேட்டு செயல்பட்டார். தேவையில்லாத சந்தாக்களை ரத்து செய்தல், மறந்துவிட்ட வங்கி மற்றும் முதலீட்டு கணக்குகளை மீண்டும் இயங்கச் செய்தல், பக்க தொழில்கள் குறித்து யோசனை செய்வது போன்ற பல வழிகளிலும் அவர் செயல்பட்டார்.

ஒருநாள் ChatGPT ஆலோசனையின் பேரில் தனது நிதி செயலிகளை கவனமாக ஆய்வு செய்த ஜெனிபர், பழைய brokerage account உள்ளிட்ட $10,000 (ரூ.8.5 லட்சம்) அளவுக்கு மறைந்திருந்த பணத்தைக் கண்டுபிடித்தார். மேலும், வீட்டில் இருந்த பொருட்களைப் பயன்படுத்தி உணவு தயாரித்து, ஒரு மாதத்துக்குள் சுமார் ரூ.50,000 வரை உணவு செலவுகளை குறைத்துள்ளார். அதன் விளைவாக, 30 நாட்களில் $12,078.93 (ரூ.10.3 லட்சம்) கடனை அடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

“நான் பயமின்றி கணக்குகளை நேரில் பார்த்தேன். ஒதுக்காமல், தினமும் அதற்கேற்ப செயல்பட்டேன். அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது,” என ஜெனிபர் உருக்கமாக கூறியுள்ளார். மேலும், “எல்லா பதில்களும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. முக்கியமானது – நீங்கள் துவங்குகிறீர்களா இல்லையா என்பதுதான்,” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நம்முடைய நாட்டிலும் நிதி அறிவு பற்றாக்குறையால் பலர் கடன்களில் சிக்கியுள்ள சூழ்நிலையில், ஜெனிபர் ஆலனின் இக்கதை நமக்கு ஒரு மிக முக்கியமான உணர்வூட்டும் எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் AI தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட்டால், நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கக்கூடியது என்பதை இந்த சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.