திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க் செய்ய உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் காருக்குள் இருந்த 10 பவுன் நகைகள் காணவில்லை எனக் கூறி, நிகித்தா போலீசில் புகார் அளித்ததையடுத்து, அஜித்குமாரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை என்ற பெயரில் அஜித்குமார் மீது போலீசார் தாக்கியதாக நடத்தியதாக வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளன. காவல் ஆய்வாளர் அபூதுல்யா, காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி மற்றும் பாலி உட்பட 5 பேரை ஆயுதப்படைக்கும் மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.