அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் கடந்த 1990 களின் முற்பகுதியில் 15 ஏக்கர் மலை அடிவார பகுதியில் இஸ்கான் ஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவில் அமைந்துள்ளது. உலக அளவில் ஹோலி பண்டிகைக்கு புகழ்பெற்ற கோவில் ஆகும்.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அந்தக் கோவில் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கோவிலின் சுற்றுப்புற கட்டிடம் மற்றும் சில பகுதிகளில் 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை பாய்ந்துள்ளன.

இது குறித்த புகைப்படங்களை கோவில் நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் உள்ளே பக்தர்கள் இரவு நேரங்களில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தூதரகம் கூறியதாவது, இஸ்கான் கோவில் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

இச்சூழலில் அனைத்து பக்தர்களுக்கும், சமூகத்திற்கும் இந்திய துணை தூதரகம் முழு ஆதரவையும் வழங்கும். உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.