திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் திருமணமான நான்கு நாட்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் தேதி லோகேஸ்வரி என்பவருக்கு பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று அந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் பன்னீர், அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெறும் ஒரு சவரன் நகைக்காக நடந்த வரதட்சணை கொடுமையால் லோகேஸ்வரி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ரிதன்யா என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் வரதட்சணை கொடுமையால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதில் ரிதன்யாவுக்கு 300 பவுன் தங்க நகைகள் போட்டு மிகவும் பிரமாண்டமாக அவரது தந்தை திருமணம் செய்து வைத்த நிலையில் மீண்டும் வரதட்சணை கேட்டு கணவன் மற்றும் மாமனார் மாமியார் துன்புறுத்திய நிலையில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். மேலும் 300 சவரன் நகைகள் பத்தாது 500 சவரன் நகைகள் வாங்கி வா என கணவன் குடும்பத்தினர் தொடர்ந்து அந்த பெண்ணை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதால் கடைசியாக தன் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவத்தின் தாக்கமே அடங்காத நிலையில் தற்போது திருமணமான நான்கு நாட்களில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.