ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் மற்றும் பி.எஸ்.எஸ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.

அவர்கள் பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் தீவிர விசாரணை மேற்கொண்ட போது 60 கிலோ எடையில் ஹெராயின் என்ற போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை கடத்திய 9 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் 6 பேர் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தற்போது கனடாவில் வசித்து வரும் நிலையில் பாகிஸ்தானின் பிரபல போதை பொருள் கடத்தல் காரரான தன்வீர் ஷா மற்றும் இந்திய கடத்தல்காரரான ஜோபன் காலர் ஆகியோரின் உதவியுடன் இந்த போதை பொருளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

தற்போது பின்னணியில் இருந்து செயல்படும் முக்கிய குற்றவாளிகள் ஆன இவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்னும் பல குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.