அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான பிரியானா லாஃபெர்ட்டி, உயிருக்கு ஆபத்தான மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் செயல் இழந்து முடங்கிவிட்ட நிலையில், அவர் சிகிச்சை பெறும் போது சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக மரணமடைந்தவராக அறிவிக்கப்பட்டார்.  ஆனால் அதன் பிறகு அவர் திடீரென உயிர் பிழைத்து விட்டார்.

அந்தப் பெண் தன்னைப் பற்றிய விஞ்ஞான ரீதியிலான விளக்கத்தையும் தாண்டி, ஒரு ஆன்மீக உணர்வை அனுபவித்ததாக கூறுகிறார். “என் உடலிலிருந்து பிரிந்து மேலே மிதந்தபடி எனது உடலை பார்த்தேன். அங்கு எவ்வித வலி எதுவும் இல்லை. நேரம் என்றே இல்லாத ஒரு அமைதியான இடம். என்னுடைய எண்ணங்கள் உடனடியாக நிகழ்வுகளாக மாறியது போல இருந்தது. இறப்பு என்பது ஒரு மாயைதான்… ஆன்மா என்றும் உயிருடன் தான் இருக்கும்,” என அவர் கூறினார்.

பிரியானா கூறுகையில், மறுமையில் ஒரு உயர் நுண்ணறிவு அவரை வழிநடத்தியது போல இருந்ததெனவும், அங்கு எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கும் போல் உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறார். அவரின் மனதின் எண்ணங்கள் தன்னிச்சையாக நிகழ்வுகளாக மாறின. இது வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலையை முற்றிலும் மறுத்தது. அந்த உலகத்தில் எந்த பயமும் இல்லை, தவிர்க்க முடியாத அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது என்கிறார்.

இந்தக் கதை நிஜமா அல்லது நம்பிக்கையா என்பது விவாதத்திற்குரியது என்றாலும், அறிவியல் இந்த அனுபவங்களை புரிந்து கொள்வதற்காக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், மரணத்தின் நெருங்கிய தருணங்களில் மனித மூளை கடந்த வாழ்க்கையின் முக்கிய தருணங்களை ஞாபகப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கனடாவின் கல்கரி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், உயிருள்ள உயிரினங்களில் காணப்படும் ஒரு மங்கிய ஒளி – Ultraweak Photon Emission – மரணத்துடன் காணாமல் போவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இறப்பு என்பது முடிவு அல்ல, மாற்றம் மட்டுமே என்ற செய்தியை பிரியானா அனுபவம் மீண்டும் வலியுறுத்துகிறது.