
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் அமைந்த பேரிகை அருகே தென்னந்தோப்பில் அதிர்ச்சியூட்டும் போதை விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி நடந்து வந்தது.
கடந்த 24ம் தேதி இரவு, கக்கனூர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடகாவிலிருந்து வந்த கார் ஒன்று நிற்காமல் தப்பி ஓடியது. போலீசார் அதனை துரத்தி, பேரிகை அருகே முதுகுருக்கி என்ற இடத்தில் உள்ள தென்னந்தோப்பில் நிறுத்தினர்.
அங்கு போலீசார் சென்றபோது, வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் அரைகுறை ஆடைகளில் டிஜே சவுண்டுடன், போதையில் தன்னிலை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
போலீசார் வந்ததையும் கண்டுகொள்ளாமல் குத்தாட்டம் போட்டிருந்த இளையவர்கள், தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். எனினும், நிகழ்விடத்தில் நடத்திய சோதனையில் வெளிநாட்டு மதுபானங்கள், கஞ்சா, போதை மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, பெங்களூருவைச் சேர்ந்த பாலாஜி (36), பீகாரைச் சேர்ந்த ரஜினீஸ்குமார் (42), கோவாவைச் சேர்ந்த இக்னேஸஸ் லாரன்ஸ் காமி லோ (47) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், 4 ஏக்கர் தென்னந்தோப்பை ஆண்டுக்கு ₹2 லட்சத்திற்கு குத்தகை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் பண்ணை வீடு அமைத்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு இரவு விருந்துடன் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. தற்போது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.