ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள சாகேத்ரி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தது. தற்கொலை செய்து கொண்டவர்களில் பிரவீன் மிட்டல், அவரது மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் வயதான பெற்றோர் அடங்குவர்.

இவர்கள் ரூ.20 கோடிக்கும் அதிகமான கடன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முன்பு பிரவீன், தனது நண்பருக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்கான கடிதம் எழுதியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, பிரவீன் மிட்டல் இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு ஸ்கிராப் தொழிற்சாலை நடத்தி வந்தார். ஆனால் கடன் சுமையால் அந்த தொழிற்சாலையை வங்கி பறிமுதல் செய்தது. தொடர்ந்து அவர் டேராடூன், பிஞ்சோர் உள்ளிட்ட இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்தார். தற்போதைய காலகட்டத்தில், அவர் பஞ்ச்குலாவில் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவரது வீடும் வாகனங்களும் வங்கியால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கடன் சுமை, குடும்ப நலனிலும் வாழ்க்கைத் தரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முன், அவர்கள் பாகேஷ்வர் தாமில் நடந்த ஆன்மீக நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய பின்னரே விஷம் குடித்துள்ளனர்.

அதாவது இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு ஒரு காரில் வைத்தே தற்கொலை செய்து கொண்டனர். ஒரு குடியிருப்பாளர் சந்தேகத்துடன் காரை பார்த்தபோது, அதில் துர்நாற்றம் வீசியதால் உள்பக்கம் பார்வையிட்ட‌ போது ஆறு சடலங்களை கண்டறிந்தார். கார் அருகே அமர்ந்திருந்த பிரவீன் மிட்டல், “என் குடும்பம் இறந்துவிட்டது, இன்னும் ஐந்து நிமிடங்களில் நானும் செல்வேன்” என்று கூறியுள்ளார்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அனைவரும் உயிரிழந்துள்ளதாக மருத்தவர்கள் உறுதி செய்தனர். “ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வந்திருந்தால், ஒருவனை எப்படியும் காப்பாற்றியிருக்கலாம்,” என குடியிருப்பாளர் வேதனையுடன் கூறியுள்ளார். தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்துக்கான முழுமையான பின்னணியை உறுதிசெய்து வருகின்றனர்.